மிட்டாய் கவிதைகள்!

ஏர்-அறிவும் ஏடு-அறிவும்!

July 22, 2013

yaer arivum edu arivum

ஏடு பிடித்து எழுத்தறியும் நேரம்
ஏர் பிடித்து உழுதறிகிறேன்
ஏழையாக நான் பிறந்தது காரணமா?
இல்லை என் பெற்றோர்
ஏழையாய் இறந்தது தான் காரணமா?
காரணம் நானறியேன்!
பட்டறிவு பெறவும் பணம் பத்தவில்லை,
பட்டுப்பட்டு பகுத்தறிவு அதனாலே!

சூரியன் கிழக்கிலுதித்து மேற்கிலே மறைவான் என
உருத்தட்டி மார்தட்டும் கற்றோர் சிலருக்கு,
பழகிய இடத்திலும் பழக்கமில்லை
கிழக்கும் மேற்கும்!

வீரியமாய் வெய்யிலெனைச் சுட்டபோதும்
மழைத்துளிகள் பொய்த்துப் போனபோதும்
மண்ணைப் படித்துப் பின்னர்
பயிரிட்டிருக்கலாம் எனத் தோன்றும்
எனக்குத்தான் வாய்ப்பில்லை,
வரும் காலமாவது வளமாகட்டும்!

கற்றோரே, பெற்றோர் தேடினால்
கணினியில் காணாமல் போகாமல்
வெளியே சென்று
கல்லாதான் கண்ணில் பட்டால்
கற்கச் செய்யுங்கள் !
பட்டறிவும் பகுத்தறிவும் சேர்ந்து
பதிக்கட்டும் புதிய சாதனைகள் !


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்